மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருப் திரைப்படம் இந்தியாவில் 5 மொழிகளில் வெளியானது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் துல்கர்.  

முன்னதாக தமிழில் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா முதல்முறை இயக்குனராக களமிறங்கும் ஹே சினாமிகா படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று(டிசம்பர் 21) வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து தெலுங்கில் ராணுவ வீரராக துல்கர் நடித்துள்ள யுத்தம் ராசினா பிரேம கதா மற்றும் பாலிவுட்டில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் CHUP-THE REVENGE OF ARTIST படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே மலையாளத்தில் காவல்துறை அதிகாரியாக துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் சல்யூட்.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள சல்யூட் திரைப்படத்தை துல்கர் சல்மான் தனது Wayfarer பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில், அஸ்ஸலாம்.கே.புரையில் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். துல்கர் உடன் இணைந்து டயானா பெண்டி, மனோஜ்.கே.ஜெயன், சானியா ஐயப்பன், லக்ஷ்மி கோபாலஸ்வாமி, சாய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி துல்கரின் சல்யூட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.