தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்க, தயாராகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் இணைந்து தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் உலக அளவில் பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம்.

இயக்குனர் P.S.வினோத் ராஜ் எழுதி இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் இணைந்து நடித்துள்ளனர். விக்னேஷ் கும்முளை மற்றும் ஜெய.பார்த்திபன் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியா சார்பில் நேரடியாக ஆஸ்கார்  விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது கூழாங்கல் திரைப்படம். இந்தியா சார்பில் ஆஸ்கார் வெல்லும் தமிழ்த் திரைப்படமாக கூழாங்கல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டு, “இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உன்னதமான சினிமாவை கொடுத்த இயக்குனர் வினோத் ராஜுக்கு நன்றி. இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் பரிந்துரைக்கு தேர்வு செய்த இந்திய நடுவர் குழுவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அனைத்து நல விரும்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்” என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது இறுதி பட்டியல் இதோ…