“ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோய், புதிது புதிதாக உருமாறி தற்போது ஒமைக்ரான் வகை வைரசாக மாறி, உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், தற்போது புதிதாக மாறியுள்ள கொடிய வைரசான ஒமைக்ரான், உலகம் முழுவதும் கிட்டதட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், உலக மக்கள் பலரையும் மீண்டும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

அதுவும், கொரோனா தொற்றின் வகையில் பார்க்கும் போது, டெல்டா எனும் கொடிய வகை வைரசை விட, ஒமைக்ரான் வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியதாகவும் இருக்கிறது.

முக்கியமாக, இந்த வகையிலான வைரசானது, “தடுப்பூசி திறனை பாதிப்பதாகவும், தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாகவும் ஒமைக்ரான் வைரஸ் திகழ்வதாகவும்” கூறப்படுகிறது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ், அடுத்த ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது, இந்தியாவில் ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 யை, தொட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான், உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், இது குறித்த ஆராய்ச்சியில் “ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை” தற்போது, கண்டுப்பிடித்து உள்ளனர்.

அந்த பொதுவான அறிகுறியானது என்னவென்றால், அது தான் “தொண்டை வலி” ஆகும். 

குறிப்பாக, “ஒமைக்ரான் தொற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு தொடக்கத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுப்பிடித்து உள்ளனர்.

அத்துடன், “தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாகவும்” மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதே போல், கடந்த டிசம்பர் 3 முதல் 10 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சோதனை தொடர்பான ஆய்வில், “தலைவலி, சோர்வு, குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதும்” தெரிய வந்திருக்கிறது.

“டெல்டா வகை வைரஸ்க்கும், ஒமைக்ரான் வகை தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாகவும்” ஆய்வாளர்கள் தற்போது கூறியுள்ளனர்.

குறிப்பாக, “டெல்டா பாதிப்பு காரணமாக வாசனை, சுவை தெரியாமல் போவது மற்றும் காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது என்றும், இன்னும் சிலருக்கு குடல் பிரச்சினைகளும் கண்டறியப்பட்டு உள்ளதாகவும்” .ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, ஒமைக்ரான் அறிகுறிகள் ஆய்வினை தலைமையேற்று வழி நடத்திச் சென்ற விஞ்ஞானியும், பேராசிரியருமான டிம் ஸ்பெண்டர் இது குறித்து பேசும் போது, “ஒமைக்ரானின் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக இருக்கிறது” என்று, தெரிவித்து உள்ளார்.