9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ராணிப்பேட்டையில் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல், விழுப்புரத்தில் தனி ஊராட்சி கோரிக்கையை ஏற்காததால், தேர்தல் வாக்குப்பதிவை மக்கள் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி உள்ளது. 

அத்துடன், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவானது, மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதன் படி, இந்த தேர்தலில் 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று மொத்தம் 7 முனை போட்டிகள் நிலவி வருகின்றன.

அத்துடன், காலை 7 மணி முதல் வாக்குப் பதிவுகள் தொடங்கி உள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், ஓரிரு இடங்களில் வாக்குப் பதிவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதன் படி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, ஊராட்சி மன்ற தலைவருக்குப் போட்டியிடும் லக்ஷ்மி என்பவரின் பெயர் தனலட்சுமி என மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாகப்  புகார் வந்த நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

அதே போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்து உள்ள நிலையில், அங்கு கடந்த 3 முறை உள்ளாட்சித் தேர்தல் ஏலம் முறையில் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு 13 லட்சம் ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20,08,000 ரூபாய் என ஏலம் விடப்படுவதால், தேர்தல் யாவும் பெயரளவிலேயே நடந்திருப்பதாக ஒரு பகுதி மக்கள் கூறுகின்றனர். 

முக்கியமாக, பொண்ணங்குப்பம் ஊராட்சியானது 1,400 வாக்குகள் கொண்ட ஊராட்சியாகவுமு், துத்திப்பட்டு கிராமமோ, 2,400 வாக்குகள் உள்ள பகுதியாகவும் உள்ளது. 

இதனால், துத்திப்பட்டு பகுதி மக்களே பதவிகளை ஏற்று வரும் நிகழ்வு தொடர்ந்து இருந்து வருவதால்? பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, தனி ஊராட்சி கேட்டு விழுப்புரம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். இதனால்? அப்பகுதி வாக்குச்சாவடி வெறிச்சோடி உள்ளது.

அதே போல், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்கு சேகரிப்பதாகக் கூறி, அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 2 மணி நேரத்தில் 7.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.