ராணிப்பேட்டையில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பலாத்காரம் செய்த 3 சிறுவர்களில் ஒருவரின் பெற்றோரும் உடந்தையாக இருந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 14 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தினமும் அந்த பெண் கூலி வேலைக்குச் சென்று வரும் நிலையில், சிறுமி பள்ளிக்கூடம் சென்று வருவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, சிறுமியை வீட்டில் தனியாக விட்டு விட்டு அந்த பெண் எப்போதும் போல், வேலைக்குச் சென்றுள்ளார்.

அதன்படி, காலையில் வீட்டில் சிறிது நேரம் விளையாடும் அந்த 14 வயது சிறுமி, அதன் பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த தனது பள்ளி தோழியின் வீட்டிற்குச் சென்று விளையாடுவதும், டி.வி. பார்ப்பதுமாகவும் இருந்துள்ளார்.

அந்த வீட்டில் பள்ளித் தோழியின் சகோதரரான 17 வயது சிறுவன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அந்த சிறுமியும் பயத்தில், இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். 

இதனையடுத்து, அந்த சிறுமியை, தோழியின் 17 வயது சிறுவன் தொடர்ந்து அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த 17 வயதுடைய சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாகத் தனது நெருங்கிய நண்பர்கள் 2 பேரிடம் கூறி பெருமைப்பட்டுள்ளான். அவர்களும், அந்த சிறுமியை அடைய வேண்டும் என்று, அவனிடம் கேட்டுள்ளனர். அதற்கு, இவனும் சம்மதித்துள்ளான்.

அதன்படி,  அவனுடைய 2 நண்பர்களும், அந்த சிறுமியை மிரட்டி பலவந்தமாக தனித்தனியாக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்கார கொடுமை கடந்த ஓராண்டாக நடந்துள்ளது. இந்த ஓராண்டும், அந்த சிறுமியை அந்த 3 சிறுவர்களும் மாறி மாறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த சிறுமிக்கு சமீபத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி மிக அதிகமான வயிற்று வலியால் துடித்த அந்த சிறுமியை, அவரது தாயார் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இந்த தகவலை, சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தயார், சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கித் தவித்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மருத்துவமனை சார்பில், சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவலை வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி, மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாகச் சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த 3 சிறுவர்களும் கடந்த ஒரு ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாகச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும், இந்த தகவல் அந்த 3 சிறுவர்களில் ஒருவரின் பெற்றோருக்குத் தெரியும் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், தன் மகன் 14 வயது சிறுமியிடம் அத்துமீறுவதை பலாத்காரம் செய்வதைத் தடுக்காமலும், சிறுமிக்கு நடக்கும் கொடுமையைத் தடுக்காமலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உண்மையை மறைத்ததாகவும் அந்த சிறுவனின் பெற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், அந்த 17 வயது சிறுவர்கள் 3 பேரும், குறிப்பிட்ட ஒரு சிறுவனின் பெற்றோரான வசந்தகுமார் - சுமதி ஆகியோரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்த 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்களைச் செங்கல்பட்டு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெற்றோர்களான வசந்தகுமார் - சுமதி ஆகியோரை வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். 

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியையும், சிறுமிக்குப் பிறந்த குழந்தையையும் மீட்ட அதிகாரிகள், திருப்பத்தூர் மாவட்ட அரசு தொட்டில் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.