ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு மொத்தமாக பறித்துவிட்டதால், நிதிக்கு கொத்தடிமை போல கையேந்தும் நிலைமை உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் மு.க.ஸ்டாலின் ஆதங்கத்துடன் பேசினார்.

mkstalin

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஒரு அடுக்கு மொழி உண்டு பேச்சைக் குறைத்து நம்முடைய திறமையை காட்டிட வேண்டும். டூ ஆர் டை என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. செய் அல்லது செத்துமடி. ஆனால் அதைக் கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னைப் பொறுத்தவரையிலே இந்த டூவுக்கும், டைக்கும் இடையே உள்ள ஆர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு டூ அன்ட் டை என சொல்ல வேண்டும். அதாவது செய்து முடித்துவிட்டுதான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். அதனால்தான் தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களது முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டி இருக்கிறோம் என்பதை நானும் மறக்கவில்லை நீங்களும் மறந்திருக்கமாட்டீர்கள் என தெரிவித்தார்.

மேலும் அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் கருணாநிதி. அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கியவர் கருணாநிதி, இந்தக் கருணைக்கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு தி.மு.க.தான். அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் தி.மு.க. அரசுதான். இப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன. மக்களாட்சித் தத்துவத்தில் 4 தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாகவும்  அதேநேரத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று நான் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன். அந்த உரிமையுடனும் தகுதியுடனும்தான் நான் இந்த மாநாட்டுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார். உங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் உணர்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கம் இப்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது ரூ.5 லட்சம் கோடிக் கடனில் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும் சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்தது. இந்தக் கடந்த காலத் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உறுதியாக இருக்கிறது. அப்போது உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே இது போன்ற மாநாடுகளையெல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து இந்த உறுதியை கேட்காமேலேயே நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித்தரும். ஆகவே நான் இருக்கிறேன் நீங்கள் இதைப்பற்றி சிறிதளவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று முதலவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்க கஜானாவுக்கு வரவேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதனை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்துவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலைமையில் தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து இந்த மாநாட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.