தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிப்பில், அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் நாய் சேகர். பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி இணைந்து நடித்துள்ள முழு நீள நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கிறது நாய் சேகர் . 

முன்னதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி ஜெயம் ரவி நடித்து வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பர்ஹிட் ஆனது. இதனையடுத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்குகிறார். 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 22வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.சத்யராஜ் மற்றும் யோகிபாபு துறை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இந்த புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது நிஜ வாழ்க்கையில் அனைத்து காதல் கதைகளும் தொடங்கியதும் முடிந்ததும் யுவனின் பாடல்களிலே… அதுபோலவேதான் இந்த திரைப்படத்திலும்” என குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.