ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று, பிசிசிஐ அறிவித்து உள்ளது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்திய இளம் வீரர்கள் அனைவரின் பாராட்டு மழையும் நனைந்து வருகின்றுனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான 14 வது ஜூனியர் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வந்தன.

இந்தத் தொடரில், யஷ் துல் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே மிக அற்புதமாக ஆடி வந்தது. இதனால், இந்திய இளம் அணியானது வெற்றிகளை தொடர்ச்சியாக குவித்து வந்தது.

இந்த நிலையில், இப்போட்டியின் லீக் சுற்றின் பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் நாக்ட் அவுட் சுற்றுக்கு இந்திய அணி, முன்னேறிய நிலையில், காலிறுதியில் வங்கதேச அணியையும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. 

இதனையடுத்து, இந்திய இளம் அணியானது 8 வது முறையாக, உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதன் படி, நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்து, 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அதன் படி, இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை மிரட்டினர்.

அதனைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது, அபாரமாக வெற்றி பெற்றதுடன், 5 வது முறையாக கோப்பையையும் தட்டி சென்றது. 

அதாவது, ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றிருந்த இந்திய அணியானது, இந்த வெற்றியின் மூலமாக, 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, புதிய சாதனையை படைத்ததுடன், புதிய வரலாறையும் படைத்திருக்கிறது இந்திய இளம் அணி.

இதனால், இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவரும் பாராட்டு மழையில் தற்போது நனைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், “ஜூனியர் உலக கோப்பையை வென்று உள்ள இந்திய இளம் அணியின் வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்” என பிசிசிஐ அறிவித்து உள்ளது. 

இதே போன்று, “இந்திய இளம் அணியின் ஊழியர்கள் மற்றும் அந்த அணியின் தேர்வாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்றும்,  பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும், துணை பயிற்சியாளர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும் உலகக் கோப்பையை இவ்வளவு சிறப்பாக வென்றதற்கு வாழ்த்துகள்” என்று, தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “நாங்கள் அறிவித்துள்ள இந்த 40 லட்சம் ரொக்கப் பரிசானது, ஒரு சிறிய பாராட்டுச் சின்னம் மட்டுமே என்றும், ஆனால் அவர்களின் முயற்சிகள் நாங்கள் வழங்கும் மதிப்பிற்கு அப்பாற்பட்டவை” என்றும், அவர் புகழாராம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.