தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சென்னை 600028 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

தொடர்ந்து கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, பலூன் உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்துள்ள நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸ் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான நிலையில், அடுத்ததாக கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம் மற்றும் பட்டாம்பூச்சி  என வரிசையாக பல திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்தவரிசையில்  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சிவ சிவா படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் சிவ சிவா படத்தின் பெயர் வீரபாண்டியபுரம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது . 

வீரபாண்டியபுரம் திரைப்படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயப்பிரகஷ் மற்றும் பாலசரவணன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரபாண்டியபுரம் திரைப்படத்தை LENDI ஸ்டுடியோ சார்பில்  தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

தனது 30வது திரைப்படமாக வருகிற பிப்ரவரி 18-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள வீரபாண்டியபுரம் திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜெய்.  முன்னணி ஒளிப்பதிவாளரான R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியபுரம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அதிரடியான அந்த ட்ரைலர் இதோ…