“பாஜகவின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒருபோதும் பலியாகக் கூடாது என்றும், கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்றும், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பைக் கடந்த ஆட்சியில் மத்திய அரசு அறிவித்தபோது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை வரவேற்றார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இந்த நதிகளை இணைக்கிற அறிவிப்பு காவிரியில் நமக்கான உரிமையை மறுக்க செய்வதற்கான வேலை” என்றும், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. 

குறிப்பாக, “பாஜகவின் சூழ்ச்சிக்குத் தமிழ்நாடு பலியாகக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசு கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்றும், அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார். 

“கடந்த வாரத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்” என்றும், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் எச்சரித்து உள்ளார்.

அத்துடன், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன் படி, மேகேதாட்டுவில் 2 நீர்மின் திட்டங்களை ஓகேனக்கலிலும் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தை முன்வைத்தது. 

தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இது தொடர்பாக பலசுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தப்பட்டன. ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்நாடக அரசு தாங்களாகவே மேகேதாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி செய்து போது, அந்த பேச்சு வார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது.

ஆனால், மத்தியில் பாஜக வந்தபிறகு, அணை கட்டுவதற்கான முயற்சிகள் இன்னும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் தற்போது அதிகரித்து உள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்குத் தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை சமாளிக்க மத்திய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம் தான், இந்த கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம். மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது. 

முக்கியமாக, மேகேதாட்டு அணையை, கிருஷ்ணராஜ சாகர்- கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

இப்படியாக, கிருஷ்ணராஜ சாகர் - கபினி நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் நீர்வழி பாதையில் 67 டிஎம்சி கொள்ளளவில் மேகேதாட்டு அணை அமைய இருப்பதால், கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காமல் போகும் சதி அதில் அடங்கி இருக்கிறது. 

கடந்த 25 ஆண்டுகளில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் தண்ணீர் தான். 

அதாவது, கிருஷ்ணராஜ சாகர் - மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இது தான் கர்நாடகாவை உறுத்திக்கொண்டு இருக்கிறது. இதை குறி வைத்துத்தான் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடகம் தற்போது வரை துடித்துக்கொண்டு இருக்கிறது.

இப்படியாக, மத்திய அரசு, கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்” என்றும் என்றும், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், எச்சரிக்கையாகவே தெரிவித்து உள்ளார்.