இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக  நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷராஃப், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி காட்சிகளை முடித்துவிட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக சென்னை திரும்பினார். முன்னதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதும், அந்த சமயத்தில் அமெரிக்காவில் சில காலம் தங்கி இருந்து ஓய்வெடுத்து வருவதும் வழக்கம். 

இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் மயோ மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்று திரும்பும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மருத்துவமனைக்கு வெளியில் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீதியில் நடந்து வரும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பரிசோதனை முடிந்ததும் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின் சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.