ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் கே ஜி எஃப். கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மிரட்ட ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது.
 
பிரபல கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜு கே ஜி எஃப் திரைப்படத்தில் கருடா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். கே ஜி எஃப் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்ப்பு இவரை கருடா ராம் ஆக்கியது.தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சுல்தான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தார். 

இந்நிலையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் மஹா சமுத்திரம் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். நடிகர் சித்தார்த் மற்றும் நடிகர் சர்வானந்த் கதாநாயகர்களாக நடிக்கும் மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடிகைகள் அனு இமானுவேல் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

இயக்குனர் அஜய் பூபதி இயக்கும் மஹா சமுத்திரம் திரைப்படத்தை AK என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்ய பிரபல இசையமைப்பாளர் சைட்டன் பரத்வாஜ் இசை அமைக்கிறார். மஹா சமுத்திரம் திரைப்படத்தில் வில்லனாக மிரட்ட இருக்கும் கருடா ராம்  கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போஸ்டர் இன்று வெளியானது. 

நடிகர் கருடா ராம் தனுஞ்ஜய் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர்கள் சித்தார்த், சர்வானந்த், அதிதி ராவ் ஹைதாரி  மற்றும் அனு இமானுவேல் நடித்துள்ள இந்த மஹா சமுத்திரம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.