இலவசமாகக் கல்வி கற்றப் பிறகு, அதை விற்றுவிட்டோம்! 
ஏழை - பணக்காரனுக்கு, கல்வியிலேயே தரம் பிரித்தாயிற்று!
தனியார் பள்ளிகளில் 'கட்டணம்' என்ற பெயரில் பகல்கொள்ளை மட்டும் ஆண்டுதோறும் அர்த்தமற்று நிகழ்ந்துவிடுகிறது. இப்படிப் பண்பாடு பாழ்பட்ட காலச் சூழலில், வசதியின்மை, வயதான சூழ்நிலையில் பராமரிக்க உறவினர்கள் இல்லாத குழந்தைகள், அனாதைகளாகி விட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சிக்னலில் கையேந்தும் ஆதரவற்றக் குழந்தைகளை என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் கை யேந்தும் குழந்தைகளை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பார்க்கும் போது, பலருக்கும் நெஞ்சம் நரக வேதனை அடைவதுண்டு.

சிறகு முளைக்காமல், சாலையோரங்களில் இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்தவர்களை அழைத்து வந்து, 'கல்வி' என்னும் சிறகு தந்து, சுயமாய்ச் சிந்திக்க வைத்து, பறக்க வைக்கும் முயற்சியை முன்னெடுப்பது என்பது சாதாரண விசயம் கிடையாது.

பிச்சை எடுப்போர், சாலையோரம் வசிக்கும் ஏழை மற்றும் கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் என ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாகப் பெறும் அடிப்படை தார்மீக உரிமை இங்கு அனைவருக்கும் இங்கு உண்டு.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கல்வி முறையில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து, சினிமாவில் வலியுறுத்தப்படும் கருத்துகளைப் போலவே, இங்கு நமக்கு நாமமும் வாய் கிழிய பேசுவது உண்டு. டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் கூட அனல் பறக்கும் கருத்துக்களைப் பலரும் கூறுவதுண்டு.

இப்படியாகத் தீவிர கல்விக் கொள்கை கொண்ட சில மாமனிதர்கள் மட்டும், 'ஐகோனோ ரைட்' என்ற புதிய வடிவிலான கல்வி முறையையும், உலகிலேயே தமிழ்நாட்டில் முதன் முறையாக மாணவர்களிடம் புகுத்திய நிகழ்வுகளும் இங்கு சாட்சிகளாக உண்டு.

அதாவது, ஐன்ஸ்டீன் தத்துவத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள 'ஐகோனோ ரைட்'  கல்வி முறை, எழுத்தை அடிப்படையாகக்கொண்டது.  இதை உருவாக்கியவர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ராபின்சன். ஓவியம் மூலமாக எழுத்துப் பயிற்சி அளித்து, பாடத்தை எளிய முறையில் புரிய வைப்பதே இந்த புதிய கல்வி முறையின் நோக்கம். இந்த புதிய கல்வி முறைகள் சென்னையில் கொண்டு வந்தாலும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு இன்னும் அந்த அடிப்படியான கல்விகூட கிடைக்க வில்லை என்பது வேதனையான சென்னையின் இன்னொரு பக்கமாகவே இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

நாம் அன்றாடம் சாலைகளைக் கடந்து செல்லும் போதெல்லாம், சாலையோர மக்களின் வாழ்க்கை முறையைக் கவனிப்பது நம்மில் சிலருக்கு வழக்கம் தான். 

சுருக்கமாக இன்னுமொரு உண்மையைச் சொல்வதாக இருந்தால், சுதந்திரத்துக்குப் பிறகு நாடோடியாக இருந்ததாலேயே, சாலையோரங்களில் வசிக்கும் மக்கள், அவர்கள் என்ன சாதி என்பது கூட அவர்களுக்கே தெரியவில்லை. அடிப்படை விஷயங்கள் ஒன்றுகூடத்  தெரியாமல் வாழ்கிறார்கள் என்பதும் உண்மையே.

இப்படியான சாலையோர மக்களிடம் அன்றாடம் சமைத்துச் சாப்பிடும் பழக்கமே இல்லை. குடும்பத்தின் அடிப்படையாகத் திகழும் சமையல் தொடங்கி எந்த விசயமும் அவர்களிடம் இல்லாத போது, அவற்றைப் பற்றி யோசிக்கையில் தான், குடும்பம் என்ற எந்த காரணிகளையும் பின்பற்றாமல் வெறும் சம்பிர்தாய குடும்பமாகவே அவர்கள் வாழும் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையில் காலை விடிந்தது முதல் இரவில் படுத்து உறங்கி, மறுநாள் காலை கண் விழிப்பது வரை அவர்களது வாழ்வில் நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிந்திருக்கும் வலிகளை மட்டுமே உள்ளூர உணர முடிகிறது.

இப்படியாக, சென்னை அண்ணாநகர் ரவுண்டான அருகில் சாலைகளின் ஓரம் தனக்கென்று ஒரு குடும்பத்துடன் வசிக்கும் மரியா என்ற ஓர் பெண், 'என்னை மாதிரி என் குழந்தை வரக் கூடாது. என் குழந்தைகளை எப்படியாவது பள்ளியில் சேர்த்து எதாவது படிக்கக் கற்றுக்கொடுங்கள். நான் யார் காலில் வேண்டுமானாலும் வந்து விழத் தயார்' எனக் கேட்டுக்கொண்டார். 

“சுதந்திர இந்தியாவில், கலாச்சாரங்களுக்குப் பெயர் போன நம்ம தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாடோடியாய் வாழும் அந்த மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும், இந்த காலத்தில் கூட இப்படிப் படிக்கக் கூட வழியில்லாமல், இருக்கிறார்களா?” என்று, கலாட்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நினைத்தபோது, அந்த கேள்வி கலாட்டா மீடியாவின் பண்பாளர்கள் பலரது மனசாட்சியையும் தட்டி எழுப்பியது. ஒருமித்த நேரத்தில் எல்லோரையும் யோசிக்கவும் வைத்தது. 

மறுகனமே, சென்னை மாவட்ட ஆட்சியர் தொடங்கி, சென்னை மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் என அனைவரிடமும் முன் அனுமதி பெற்று, அடுத்த 2 நாளில் வீடு மற்றும் எந்த அடிப்படை சான்றிதழும் இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மரியா - மணி தம்பதிகளின் மகன் 8 வயதான கௌதம், மரியாளின் அண்ணன் மகனான தாய் இல்லாத சிறுவன் 9 வயதான விக்னேஷ் ஆகிய இரு குழந்தைகளையும் (சென்னை தொடக்கப் பள்ளி நடுவாங்கரை, பாரதிபுரம், அமைந்தகரை அடுத்த செனாய் நகரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில்) முறையாகச் சேர்த்துவிட்டு அழகு பார்த்திருக்கிறது கலாட்டா மீடியா.

அந்த இரு குழந்தைகளும் பள்ளிக்குப் போகும் அழகைப் பார்த்து ரசித்து, அதனையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறது கலாட்டா மீடியா. 

அந்த இரு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துவிட்ட பொழுது தான், அந்தப் புள்ளியிலிருந்து தான் அந்த குழந்தைகளுக்கு 'சிறகு' பறக்க ஆரம்பித்தது. சிறகு விரிந்தது அந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்குள்ளும் தான்.

“அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது?” என்று வழி தெரியாமல் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளை மீட்டு, அவர்களின் எதிர்கால நலன் கருதி அத்தகைய செயலை கலாட்டா மீடியோவே முன்னெடுத்துச் செய்ததில், அதுவும் எதிர்கால இந்தியாவின் சிறகுகளை உருவாக்குவதில் ஒட்டுமொத்த கலாட்டா குழுமமும் பெருமிதம் கொள்கிறது.

இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதும் உயரத்திற்கு இந்தச் சிறுவர்கள் செல்லவதைக் காட்டிலும், இந்த சமூகத்தில் சாதாரண மனிதர்களாக அவர்கள் இருவரும் சொந்த வீட்டில் குடியேறி உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய முதன்மையான தேவையாக இருக்கிறது. (உதவி செய்ய மனம் படைத்தவர்களும் முன்வரலாம்)

“சிறுவர்கள் இருவரும் வெல்வது நிச்சயம். சாத்தியமாகட்டும் சாதனை!” என்று நெஞ்சார்ந்து வாழ்த்துகிறது கலாட்டா!
எதிர்கால இந்தியாவின் சிறகுகளை உருவாக்குவதில் கர்வம் கொள்கிறது கலாட்டா மீடியா!

நன்றி: (சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி IAS, கல்வித்துறை இணை ஆணையர், ஸ்நேகா IAS, சென்னை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ஜெயந்திமாலா அவர்களுக்கும் கலாட்டா மீடியா சார்பாக மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற மனிதநேயமிக்க செயல்களைக் கலாட்டா மீடியா முன்னெடுக்க அரசு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி துணை நிற்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.)