பெண் காவலர் பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக சார்லஸ் என்ற அதிகாரி பணியாற்றி வந்தார். 

எஸ்.பி. சார்லஸ், இதற்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றி, அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்குப் பணி மாறுதல் பெற்று வந்தார். 

அப்போது, அங்கு பணியாற்றும் பெண் போலீசார் ஒருவரிடம், எஸ்.பி. சார்லஸ் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த புகார் மீது நடந்த விசாரணையில் தவற்றுக்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. 

அதன் அடிப்படையில், தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர், அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவு கோவை சரக டி.ஐ.ஜி வாயிலாக, நீலகிரி மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசு அனுமதியில்லாமல் வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது, பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கூடுதல் எஸ்.பி. சார்லஸ் மீது போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள சக போலீசார் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.