நெல்லையில் நேற்று அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி உள்ளது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர், “ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

அதன் படி, நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில், “ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல், எந்த விதமான செயல்பாடுகளோ நடவடிக்கைகளோ செய்யாதே! அவ்வாறு செய்ததால் தான், தேர்தலில் தோற்றுப்போனோம், இனி மேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகை இடுவோம்” என்று, அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அத்துடன், அந்த போஸ்டரின் கீழே இப்படிக்கு என்பதற்கு பதிலாக, “மானூர் ஒன்றிய அ,இ.அதிமுக தொண்டர்கள்” என்ற பெயரில், நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட அந்த போஸ்டரில், “தனிப்பட்ட அரசியல்வாதியின் பெயரிலோ அல்லது அதிமுகவில் எந்த பொறுப்பில் இருக்கிறார்கள் என்ற விபரம் இல்லாமலும், மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் மட்டுமே, போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டு இருந்தது. 

இது, நெல்லை மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், “இது, மாற்றுக் கட்சிகளின் சதி வேலை” என்று, நெல்லை அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் சமாளித்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்றைய தினம் அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இன்றைய தினம் ஒட்டப்பட்டு உள்ள புதிய போஸ்டரில், “தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்கத் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி” என்ற, வாசகம் அதில் இடம் பெற்று உள்ளன. 

அதன் படி, நெல்லை மாநகர பகுதிகளில் அதிமுக பொறுப்பாளர்கள் சார்பில் இன்று “ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் மாநகர் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள்” ஒட்டப்பட்டு உள்ளன. 

இதனால், நெல்லை மாநகர பகுதிகளில் நேற்றும் இன்றும் என தொடர்ந்து 2 நாட்களாக அதிமுகவினரின் போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.