யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக ஆட்டத்தில், துருக்கி அணியை 3-0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி, இத்தாலி அணி அதிரடி வெற்றி பெற்று உள்ளது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை விட மிக அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு விளையாட்டு என்றால், அது கால்பந்து விளையாட்டு மட்டுமே. அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உலகம் முழுவதும் கால்பந்துக்கு உண்டு. இந்த புட்பால் விளையாட்டிலும் கூட, உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரியதும், பிரபலமானதுமானதுமாகத் திகழ்வது இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் யூரோ போட்டிகள் தான் புகழ்பெற்ற போட்டிகளாகத் திகழ்கிறது.

இந்த யூரோ கோப்பை கால்பந்து திருவிழா, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டிகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒரு வருட காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், யூரோ கோப்பை கால்பந்து திருவிழா நேற்று இரவு முதல் தொடங்கியது. 

அதன் படி, 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நள்ளிரவு தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த போட்டியில், மொத்தம் 24 அணிகள் பங்குபெறுகின்றன. இவை, 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன. 

அதன் படி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், இத்தாலி அணியை எதிர்த்து துருக்கி அணி மோதியது.

ரோமில் உள்ள ஒலிம்பிகோ ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், இடைவேளை வரை இரு அணிகளும் எந்த கோல்களும் அடிக்கவில்லை.

அத்துடன், தொடக்கம் முதலே துருக்கி அணியினர் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

மேலும், இடைவேளைக்குப் பிறகு உத்தியை மாற்றிய இத்தாலி அணி, அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து தூள் கிளப்பியது.

அதாவது போட்டியின் 53 வது நிமிடத்தில் துருக்கி தன் கோலுக்குள்ளேயே அடித்து இத்தாலிக்கு முதல் கோலை தாரை வார்த்தது. 

அதே போல், போட்டியின் 66 வது நிமிடத்தில் சிரோ இம்மொபைலும், போட்டியின் 79 வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னியும் கோல்களை அடித்து எதிர் அணியை அசரடித்தனர். இதனால், இத்தாலி முதல் முறையாக யூரோவில் 3-0 என்று கணக்கில் வெற்றி பெற்றது.

முக்கியமாக, இத்தாலி அணியில் ஜோர்ஜினியோ, இம்மொபைல் போன்ற நட்சத்திர வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

இந்த இரு அணிகளும் இது வரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், இத்தாலி அணி 9 முறை வெற்றி பெற்று உள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இன்றைய தினம் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் படி, ஏ பிரிவில் உள்ள வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

2 வது போட்டியில், பி பிரிவில் உள்ள டென்மார்க் - பின்லாந்து அணிகள் மோதுகின்றன. இதனால், இன்றைய போட்டிகளில் விறுவிறுப்புக்குத் துளியும் பஞ்சம் இருக்காது. முதல் போட்டியானது இந்திய நேரம் 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 2 வது போட்டியானது இந்திய நேரம் 9.30 மணிக்கு நடைபெறுகிறது.