டாக்கா பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டெம்புகளை எட்டி உதைத்து ஷாகிப் அல் ஹசன் ரகளையில் ஈடுபட்டது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

டாக்கா பிரிமியர் லீக் டி20 தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் எம்எஸ்சி அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் இருந்து வருகிறார். 

இப்படியான நிலையில், நேற்றைய தினம் மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. 

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்திருந்திருந்தது. 

இதனையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய எதிர் அணியில், அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்து வீசினார்.

அப்போது, பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹிமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க கள நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்க  மறுத்துவிட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த ஷகில் அல் ஹசன், சட்டென்று நடுவரின் அருகில் சென்று, ஸ்டெம்புகளைக் காலால் எட்டி உதைத்து, அந்த  நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த போட்டியானது, அப்போது சமூக வலைத்தளங்களில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ஷாகிப் அல் ஹசன் செயலால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் தொடர்ந்து விளையாடிய அவர், மற்றொரு முறையும் தன்னுடைய கோபத்தை இன்னும் அதி தீவிரமாக நடுவரிடம்  வெளிக்காட்டினார். இந்த முறை, நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த 3 ஸ்டெம்புகளையும் அப்படியே பிடுங்கி வீசினார். இப்படியாக, ஷாகிப் அல் ஹசனின் இந்த செயல் கட்டு, அங்கிருந்த நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இப்படியாக, 2 முறை கடும் கோபம் அடைந்து ஸ்டெம்புகளை உதைத்தும், அதனை பிடுங்கியும் ரகளையில் ஈடுபட்ட ஷாகிப் அல் ஹசனின் இந்த செயல்கள் அனைத்தும் லைவ்வில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைப் பார்த்த பலரும் ஷாகிப் அல் ஹசன் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், தனது தவறை உணர்ந்த ஷகில் அல் ஹசன், சமூக வலைத்தள பக்கத்தில் மன்னிப்பு தெரிவித்தார். அதில், “எனது கோபத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மூத்த வீரரான நான் அதுபோல நடந்துகொண்டிருக்கக் கூடாது. என் தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள மாட்டேன்” என்றும், அவர் கூறியிருந்தார்.

ஆனாலும், ஷாகிப் அல் ஹசனின் இந்த செயலுக்கு இணையவாசி கள் பலரும் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், ஷாகிப் அல் ஹசனுக்கு ஆதரவாக அவரது மனைவி உம்மே அல் ஹசன், தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த சம்பவத்தை ஊடகங்களைப் போலவே நானும் பார்த்து வருகிறேன். தொலைக்காட்சியிலும் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவத்தின் உண்மையை அறிந்த சிலரின் ஆதரவைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷாகிப் வெளிப்படுத்திய கோபத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டி, முக்கிய பிரச்சனையை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்று, தனது கோபத்தை வெளிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “எல்லா சூழ்நிலைகளிலும் அவரை வில்லனாக சித்தரிப்பது சிறிது காலமாக நடந்து வரும் ஒரு சதி” என்று, உம்மே அல் ஹசன் தெரிவித்து உள்ளார். இதுவும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.