முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காவிரிப் படுகைக்குப் பயணம் மேற்கொண்டு கல்லணை மற்றும் விவசாய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

சோழ தேசமான காவிரி டெல்டா பகுதிகளின் பல்வேறு முக்கிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக, இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். 

திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்குச் சென்றார். மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 இடங்களில் 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த குடிமராமத்து பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், அந்த பணிகளின் நிலவரம் குறித்தும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, குடிமராமத்து பணிகள் தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

முக்கியமாக, காவிரிப் பாசனப் பகுதியில் 4,061 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைமடை வரை இந்தப் பணிகள் செம்மையாக நடைபெறுவதை முதலமைச்சர் இந்த ஆய்வின் போது அதிகாரிகளிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். 

மேலும், தஞ்சை மாவட்டம் வல்லம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்தார்.

அத்துடன், நாளைய தினம் சேலம் மேட்டூர் அணையில் நாளை பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று சுற்றுலா மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, சிறப்பு விமானம் மூலமாக முதலமைச்சர் சேலத்திற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.