“போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது” என்று, தமிழக டி.ஜி.பி லைலேந்திர பாபு ஆவேசமாகப் பேசி உள்ளார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 55 வயதான பூமிநாதன், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி இரவு ஆடு திருடும் கும்பலை துரத்திச் சென்றபோது, மிகவும் கொடூரமான முறையில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மறுநாளே இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 10 வயது, 17 வயயது, 19 வயதுடைய சிறுவர்கள் உட்பட மொத்தம் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,  மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், உயிரிழந்த பூமிநாதனின் மனைவி மற்றும் மகனை சந்தித்து அவர் ஆறுதலும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “வீர மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு காவல் துறை வீர வணக்கம் செலுத்துகிறது என்றும், அவரது இழப்பு பெரிய இழப்பு” என்றும், குறிப்பிட்டார்.

“பூமிநாதன் ஏற்கனவே முதலமைச்சரிடம் பதக்கம் வாங்கியவர் என்றும், தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற சிறந்த வீரர்” என்றும், அவர் புகழாரம் சூட்டினார். 

அத்துடன், “கடமை உணர்வுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் அவர் வேலைப் பார்த்தவர் என்றும், ஆடு திருடும் கும்பல் தானே என்று அவர் சாதாரணமாக விட்டு விடவில்லை, மாறாக கிட்டதட்ட 15 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று 3 பேரையும் மடக்கிப் பிடித்து, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் அவர் பறிமுதல் செய்திருந்தார்” என்றும்,  டிஜிபி சைலேந்திர பாபு பெருமையோடு குறிப்பிட்டு பேசினார்.

அதே போல், “குற்றவாளிகளின் பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் செய்த குற்றத்தை தெரிவித்து அவர் அறிவுரையும் வழங்கி இருக்கிறார் என்றும், சட்ட விதிப்படி அவர் நடந்து கொண்டிருந்த நிலையில் தான் அந்த நபர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு பூமிநாதனை கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார்கள்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “காவல் துறை மீதான தாக்குதல் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்றும், அதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இப்போது முக்கியம்” என்று, குறிப்பிட்டு பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “ரோந்துப் பணியின்போதோ அல்லது தனியாக செல்லும் போதோ 6 தோட்டாக்களுடன் துப்பாக்கியை எடுத்துச்செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம்” என்றும், அதிரடியாக தெரிவித்தார். 

முக்கியமாக, “சட்டப்படி போலீசார் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ளத் துப்பாக்கியைப் பயன்படுத்தவும் தயங்கக்கூடாது” என்றும், டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாகவும், சரவெடியாகவும் வெடித்தார்.

மேலும், “இந்த வழக்கில் வீடியோ உள்பட 100 சதவீத ஆதாரம் இருப்பதால், சிபிஐ விசாரணை அவசியமில்லை” என்றும், அவர் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.