நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாகத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்துப் பேசியதாகச் செய்திகள் வெளியாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

அதாவது, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தார். 

எச்.ராஜாவின் இந்த கருத்து, சினிமா உலகினர் மத்தியிலும், அரசியல் வட்டத்திலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், “பொய்யான கருத்துகளைப் பரப்பிவருவதாக எச். ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் 
அளிக்கப்பட்டது. 

புகார் அளித்த பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அப்ரார், “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாகப் பல வருடங்களுக்கு முன்பு இறந்ததாக” குறிப்பிட்டார். ஆனால், எச்.ராஜா வேண்டுமென்றே சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக, அவர் மீது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான மற்றும் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகிறார்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

அத்துடன், “நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா கருத்து தெரிவித்து வருகிறார்” என்றும், வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும், “எச். ராஜா அவதூறு கருத்துகளைப் பரப்பிவிட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார் என்றும், ஆனால் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தங்களது புகாரில் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

அதே போல், “தமிழகம் முழுவதும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக, எச். ராஜா மீது புகார் அளித்து உள்ளதாகவும், நடிகர் சிவகார்த்திகேயனும் தலையிட்டு எச். ராஜா மீது புகார் அளிக்க வேண்டும் என்று, நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்றும், அவர் கோரிக்கை வைத்தார்.

குறிப்பாக, “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயப்பிரகாஷ் என்று  எச். ராஜா தவறாகக் குறிப்பிட்டு உள்ளார்” என்று, சமூக வலைதளங்களில் தகவலும் வெளியானது. இதற்காக, பல்வேறு தரப்பினரும் எச்.ராஜாவை கேலி செய்யும் விதமாகக் கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இந்த நன்கொடையை, தனது தந்தையின் நினைவாக அமைக்கப்பட்ட “ஜி தாஸ் பவுண்டேஷன்” என்கிற பெயரில் கொடுத்தார்.

இதனையடுத்து, “தனது தந்தை பெயர் ஜெயப்பிரகாஷ் அல்ல, ஜி தாஸ் என்று எச். ராஜாவுக்கு மறைமுகமாகக் கூறியுள்ளார் என்று இணையத்தில் கருத்துக்கள் உலா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.