தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.

rain

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில்   இடி மின்னலுடன் கூடிய   கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .

அதனைத்தொடர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.