ஒரு நண்பனாக நான் பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ்-க்கு ஓய்வுக் கால பரிசாக என்ன கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் விரும்பிய போலீஸ் தொப்பி, பெயர் பேட்ஜை பரிசாகக் கொடுத்து அசத்திவிட்டேன். ஒரே வாரத்தில் வழக்கில் சாதகமான  தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்து விட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்திகரமான வழக்கு இது. நான் நீதிமன்றத்தில் வாதாடியதைப் பார்த்த பிரதீப் ஹாலிவுட் மாதிரி இருந்தது என்றார். பிரதீப் வி பிலிப் நினைத்தது போலவே அந்த அதிசயம் நடந்து விட்டது.

- வழக்கறிஞர் சஞ்சை பிண்டோ 

நட்பில் பல விதம் உள்ளது. நட்புக்காக என்ன வேண்டுமானாலும் சிலர் செய்வார்கள். சிலரது  நட்பு வியக்க வைக்கும். சிலர் நட்புக்காகச் செய்த விஷயங்களைக் கேட்கும் போது ஆச்சரியம் ஏற்படும். அப்படியொரு நட்பைப் பற்றித்தான் இப்போது அறிந்து கொள்ளப்போகிறோம், ஒரு பத்திரிகையாளராகத் தனது தொழிலைத் துவங்கிய சஞ்சய் பிண்டோ, பின்னாளில் முழு நேர வழக்கறிஞராக மாறியுள்ளார். அவர் தனது சட்டத் திறமையால் தனது காவல் துறை நண்பருக்காக வாதாடி, நண்பரின் வாழ் நாள் ஆசையை நிறைவேற்றி வைத்து உள்ளார். தமிழகக் காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரதீப் வி பிலிப்க்கு, சஞ்சை பிண்டோ கொடுத்த ஒரு அசத்தல் பரிசு பற்றித் தான் பேசப்போறோம்.

கலாட்டா வாய்ஸ் அசைண்ட்மெண்ட் எடிட்டர் தங்கமணி கோவிந்தராஜ் உடன் வழக்கறிஞர் சஞ்சை பிண்டோ பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான உரையாடல் இதோ..

உங்களுக்கும் காவல்துறை அதிகாரி பிரதீ வி பிலிப்க்கும் இடையேயான நட்பு பற்றிச் சொல்லுங்கள்

எனக்கும் காவல் துறை அதிகாரி பிரதீப் வி பிலிப்க்கும் இடையேயான நட்பு 23 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்துத் தான் நான் அவரை சந்தித்தேன். அவரை பிரதீப் என்று தான் அழைப்பேன். என்னுடைய ஆங்கிலம், குண நலன் அவரை கவர்ந்து விட்டது. அன்று முதல் இன்று வர நண்பர்களாகத் தொடர்கிறோம். நாங்கள் குடும்ப நண்பர்களாகவே மாறிவிட்டோம். ஒவ்வொரு குடும்ப நிகழ்விலும் நானும் அவரும் கலந்து கொள்வோம்.

என்னை விட 13 வருடம் பிரதீப் வி பிலிப் பெரியவர். வயதில் மூத்தவர். இருந்தாலும் என்னோடு நல்ல நண்பராகப் பழகுவார். 

ஒரு காவல் துறை அதிகாரியாக பிரதீப் வி பிலிப்பை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் தனித்துவமான நபர். ஒரு முறை அவர் சமூக நீதித்துறை ஐஜியாக இருந்த போது, இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க டீ பார்ட்டி நடத்தினார். “அனைவரும் சமம், அனைவருக்கும் ஒரே டம்ளரில் தான் டீ கொடுக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய அவர், அந்த பார்ட்டியை நடத்தினார். சாதி ரீதியாக தென் தமிழ் நாட்டில் நிகழ்ந்து வந்த இரட்டை டம்ளர்  முறையை ஒழிக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். அதே போல், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் திட்டத்தை பிரதீப் தான் அறிமுகப்படுத்தினார். 

ஒரு ஐபிஎஸ் ஆபிசர் எனும் பந்தா, தலை கணம் எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவார். இந்த மாதிரி விஷயங்கள் பிரதீப் மீது எனக்கு அதிகம் மரியாதையை ஏற்படுத்தியது. 

நானும் எந்த விதமான உதவியும் அவரிடம் கேட்க மாட்டேன். அவருடைய பதவியைத் தவறாகப் பயன்படுத்த நினைக்க மாட்டேன். அது அவரை ஈர்த்துள்ளது. 

நாங்கள் இரண்டு பேரும் நல்லா ஆங்கிலம் பேசுவோம். நிறைய நிகழ்ச்சிகளில் நானும் அவரும் கலந்துக்கிட்டு இருக்கோம். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி என்பதைச் சொல்லியே ஆகனும். எந்த கட்சியையும் சாராதவர். 

2012ல் என் டி தொலைக்காட்சி பொறுப்பில் இருந்து விலகினேன். ஆனாலும் அவர் என்னோடு நட்பிலேயே இருந்தார். இன்று வரை நாங்கள் தொடர்ந்து பேசிக்கொள்வோம்.

இப்படியான ஒரு நட்பு 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில் தான் பிரதீப் வி பிலிப்க்கு ஒரு நட்பு பரிசு கொடுக்க நேரம் வந்தது. 

ராஜீவ்காந்தி படுகொலையின் போது பிரதீப் வி பிலிப்க்கு என்ன நடந்தது

1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். அன்றைய தினம் பிரதீப் வி பிலிப் துணை காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) அங்கு பணியிலிருந்தார். அப்போது குண்டு வெடித்ததில் பிரதீப் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதில் அவரது உடலில் பல இடங்களில் குண்டு துகள்கள் பட்டது. ரத்த கரையோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 21 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தார். அதிர்ஷ்டவசமாக பிரதீப் பிழைத்தார். அவர் 
பிழைத்தது அதிசயம் என்று அவரே சொல்வார். குண்டு வெடிப்பில் அவரது போலீஸ் தொப்பியில் அவரது ரத்தக் கரை படிந்தது. அவரது பெயர் பேட்ஜ் தனியே விழுந்தது. அந்த தருணத்தில் தான் அவருக்கு முதல் குழந்தை பிறந்து இருந்தது. அந்த தருணம் அவருக்கு வாழ்வா சாவா தருணம் தான். நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. 

பிரதீப்ன் கடைசி விருப்பம் பற்றி சொல்லுங்க..?

பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தனது காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதுக்கு முன்னர் அவருக்கு உணர்வுப்பூர்வமாக ஒரு ஆசை இருந்தது. ஓய்வு பெறும் முன்னர் ராஜீவ்காந்திக் குண்டு வெடிப்பின் போது ரத்தக் கரை படிந்த தனது போலீஸ் தொப்பி மற்றும் பெயர் பேட்ஜ் ஆகியவற்றை சிபிஐயிடம் இருந்த வாங்கி விட வேண்டும் என்று விரும்பினார். 

அதை என்னிடம் தெரிவித்தார். ஒரு வக்கீலாக நான் என் நண்பனுக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தேன். உடனடியாக சென்னை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ரத்தக் கரை படிந்த தொப்பி மற்றும் பெயர் பேட்ஜ் கேட்டு மனுத்தாக்கல் செய்ய பிரதீப்யிடம் வலியுறுத்தினேன். அதற்கு பிரதீப், அந்த தொப்பியையும், பெயர் பேட்ஜ்யும் நீங்கள் பெற்றுத் தந்தால் அது மிராக்கில் தான் என்றார். 

தொப்பி, பெயர் பேட்ஜ் வாங்க நீதிமன்றத்தில் நடந்த வாதம் பற்றிச் சொல்லுங்கள்..?

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு நீண்டகால நண்பனாகவும், வக்கீலாகவும் என் நண்பர் பிரதிப் வி பிலிப்காக நீதிமன்றத்தில் ஆஜரானேன். கொரோனா காலகட்டம் என்பதால் ஒரு ஆண்டுகளாக எந்த வழக்கிலும் நேரடியாக நான் ஆஜராகவில்லை எனது நண்பர் பிரதீப்காக நான் நேரடியாக ஆஜரானேன். பிரதீப் வி பிலிப்-ன் ரத்தக் கரை படிந்த தொப்பி மற்றும் பெயர் பேட்ஜை அவரிடம் வழங்க வேண்டும். அது அவரது தொழில் ரீதியான கடைசி விருப்பம். மேலும், பணி ஓய்வுக் கால விருப்பம் என நீதிமன்றத்தில் வாதாடினேன். உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினேன். சிபிஐ தரப்பில் வாதாடிய வக்கீல் தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவித்தார். 21 ஆம் தேதி பிரதீப் என்னிடம் சொன்னார். 

23 ஆம் தேதி மனு தாக்கல் செய்தோம். என் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தொப்பியையும், பெயர் பேட்ஜையும் பிரதீப் வி பிலிப்பிடம் ஒரு மாத காலம் வழங்க அனுமதி வழங்கியது. அந்த தருணத்தை மறக்க முடியாது. 

நீதிபதி சந்திரசேகரன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் தீர்ப்பில் பிரதீப் வி பிலிப்பின் காவல் துறை பங்களிப்பைப் பாராட்டினார். நீதித்துறை சார்பில் அவருக்கு சல்யூட் எனவும் தெரிவித்தார். 

அந்த தொப்பி, பெயர் பேட்ஜ் கையில் வந்த தருணம் பற்றி?

செப்டம்பர் 28 ஆம் தேதி தொப்பி மற்றும் பெயர் பேட்ஜ் ஆகியவற்றை பிரதீப் பெற்றுக் கொண்டார். அவரது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மிகவும் உணர்ச்சிகரமாகக் காணப்பட்டார். ராஜீவ்காந்தி கொலை நினைவுகள், அவருக்கு ஏற்பட்ட குண்டு பாதிப்பு, மருத்துவமனை காலம் என பலவற்றையும் எண்ணிப் பார்த்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். அவ்வாறே பேசினார். 

இது வக்கீலாக எனக்குக் கிடைத்த வெற்றி,  நேர்மையான காவல் துறை அதிகாரியாக பிரதீப்க்கு கிடைத்த வெற்றி. எங்கள் நட்புக்குக் கிடைத்த வெற்றி. 

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் முதல்முறையாக எனது மனைவி வித்யாவும் வழக்கறிஞராக என்னோடு இணைந்து செயல்பட்டார். அவருக்கும் இது ஒரு வெற்றி. ஒட்டு மொத்தத்தில் இது எங்கள் குடும்பம் என் நண்பர் குடும்பத்தின் வெற்றியாகவே கருதுகிறோம். 

ஒரு நண்பனின் மறக்க முடியாத பரிசு?

ஒரு நண்பனாக நான் பிரதீப்க்கு ஓய்வுக் கால பரிசாக என்ன கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் விரும்பிய தொப்பி, பெயர் பேட்ஜை பரிசாகக் கொடுத்து அசத்திவிட்டேன். ஒரே வாரத்தில் வழக்கில் சாதகமான  தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்து விட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்திகரமான வழக்கு இது. நான் நீதிமன்றத்தில் வாதாடியதைப் பார்த்த பிரதீப் ஹாலிவுட் மாதிரி இருந்தது என்றார். பிரதீப் வி பிலிப் நினைத்தது போலவே அந்த அதிசயம் நடந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக ராஜீவ்காந்தி கொலையில் ஈடுபட்ட நளினி உட்பட 7 குற்றவாளிகள் மீது தனக்கு கோவம் இல்லை என பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார். அவர்களை மன்னித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை விடுதலை செய்வதில் தனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி பிரதீ வி பிலிப் தெரித்தார். இது பிரதீப் வி பிலிப் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர் என்பதைக் காட்டுகிறது.