கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது மீண்டும் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (ஜனவரி 6) முதல் இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஞாயிறு முதல் ஞாயிறுகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும் வரை இந்த ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 % இருக்கைகள் மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து என்ற காரணங்களால் பல திரைப்படங்கள் தற்போது ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக RRR, ராதே ஷ்யாம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக இருந்த பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. அந்தவகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்குமாரின் வலிமை படமும் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

நீண்ட நாட்களாக வலிமை பொங்கல் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிப்போன வலிமை பொங்கலுக்கு ரிலீசாகிறது இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம்.

சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் தயாராகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை REDHAN The Cinema People சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார். மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடிக்க சூரி, மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெறடி, தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.