கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக, அவரது மனைவி உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.

இந்தியாவில் 2 வது அலையாக வீசிக்கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீர்ர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று, பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக, சினிமா பிரபலங்கள் பலரும், தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தற்போதைக்கு ஒத்திவைத்து உள்ளனர். 

அதே போல், விளையாட்டு வீரர்களில் சிலர் போட்டிகளில் பங்கேற்பதை விட்டு விட்டு, தங்களது குடும்பத்தினருடன் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றனர். 

ஆனால், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகுவதாகக் கூறி, சொந்த நாடு திரும்பினார்கள். நேற்றைய தினம் கூட ஐபிஎல் போட்டியின் நடுவர்கள் இருவருர் போட்டியில் இருந்து கொரோனா காரணமாக விலகுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். இது, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.

அத்துடன், “இந்த இக்காட்டான கொரோனா காலகட்டத்தில், எனது குடும்பத்துடன் நான் இருக்க விரும்புகிறேன் என்றும், கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தினர் போராடி வரும் நிலையில், இந்த இக்காட்டான தருணத்தில் நானும் அவர்களுடன் உடன் இருப்பது மிகவும் அவசியம்” என்றுதடஈ அஸ்வின் விளக்கம் அளித்திருந்தார். 

இந்த நிலையில், “கிரிக்கெட் வீரர் அஸ்வினின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது” தற்போது தெரியவந்து உள்ளது. 

இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி பிரீத்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஒரே வாரத்தில் தனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக” கூறியுள்ளார். 

மேலும், “வீட்டு குழந்தைகள் மூலமாக கொரோனா தொற்று பெரியவர்களுக்கும் பரவியதாகவும்”  அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக, “வீட்டில் உள்ள அனைவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியமாக, “இந்த நாட்கள் மிகவும் மோசமான வாரம்” என்றும், பிரீத்தி நினைவு கூர்ந்துள்ளார்.

“கொரோனாவில் இருந்து தப்பிக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே இந்த தொற்றுக்கு எதிராகப் போராட ஒரு வழி என்றும், உடல் வலிமையைவிட மன வலிமை மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை மீட்கும்” என்றும், பிரீத்தி குறிப்பிட்டு உள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வினின் வீட்டில் 10 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது, சக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.