திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

சென்னை அடுத்து உள்ள பொன்னேரி அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பொன்னேரி அடுத்து உள்ள அத்திப்பேடு காலணியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் 22 வயதான சரத் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இப்படியான நிலையில், 22 வயதான சரத், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவியான 16 வயது சிறுமியை, தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் டார்ச்சர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, கடந்த டிசம்பர் மாதம், அந்த மாணவியை காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, அந்த மாணவியை அவன் கடத்தி சென்றாக கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பெரிய பாளையம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து, தாலி கட்டி இருக்கிறார். இதனையடுத்து,  சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து, கடந்த 3 மாத காலமாக, அந்த மாணவியுடன் அவன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, அந்த பள்ளி மாணவி, சம்மந்தப்பட்ட இளைஞனால் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டு, அந்த இளைஞன் திடீரென்று மாயமானதாகத் தெரிகிறது.

அத்துடன், அவரை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர்கள் முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை தெரிந்துகொண்ட சம்மந்தப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர், அங்குள்ள பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “எங்கள் மகளைக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரத் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர், பள்ளி மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிய சரத்தை அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப் படி, அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.