அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.பி நவநீத கிருஷ்ணனின் கட்சி பதவி பறிக்கப்படுவதாக ஓ.பி.எஸ், - ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் திமுக - அதிமுக இரண்டுமே, எதிரும் புதிருமாக நிற்கும் இரு பெரும் கட்சிகள். தமிழக அரசியலில் சூழல் இப்படி இருக்கும் போது, இந்த இரு கட்சியில் உள்ளவர்கள் தங்களது எதிரி கட்சியில் உள்ளவர்களை விமர்சித்து பேசுவது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும், அதற்கு மாறாக அவர்களை புகழ்ந்து பேசுவது என்பது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகவே காணப்படும்.

அப்படி, மிகவும் அரிதான ஒரு நிகழ்வுதான், தமிழக அரசியலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

அதுவும், “அதிமுகவின் கார் ஒன்று, நட்பு ரீதியில் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?” அப்படியான ஒரு நிகழ்வுதான் தமிழக அரசியலில் தற்போது புயரை கிளப்பியிருக்கிறது.

அதாவது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழா நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசி சிறப்பித்தனர். அப்போது, இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன், மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி பேசினார். 

நவநீதகிருஷ்ணன், பேசும்போது, “நாடாளுமன்றத்தில் எப்படி நிகழ்வுகள் நடைபெறும் என்றும், நாடாளுமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்றும், எனக்கு கற்றுக்கொடுத்தவர் திமுக எம்.பி. கனிமொழி தான்” என்று, புகழாராம் சூட்டினார்.

இப்படி, திமுக எம்.பி. கனிமொழியை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், பெருமையோடு பாராட்டிப் பேசியது அங்கு கூடியிருந்த திமுகவினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது என்றாலும், அவர்கள் அனைவரும் கை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், புகழ்ந்து பேசியது பற்றிய செய்தி, நேற்றைய தினம் இணையத்தில் பெரும் வைரலானது. 

இதனால், அதிமுக வட்டாரத்தில் இந்த செய்தி, நேற்றைய தினம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, “திமுக எம்பி கனிமொழியை புகழ்ந்து பேசிய, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்பட்டார்” என்ற செய்தியை, அந்த கட்சியின் தலைமை அறிக்கையாக வெளியிட்டது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்படுவதாக” தெரிவித்து உள்ளது. 

மேலும், “கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாலே, கட்சியில் இருந்து நவநீதிகிருஷ்ணன் நீக்கப்பட்டு உள்ளதாக” அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார்.

அத்துடன், “அதிமுகவில் இருந்து கொண்டு, திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல் என்றும், அங்கு கால் வைப்பதே அவமானம் என்றும், அப்படி இருக்கும் போது, நவநீதகிருஷ்ணன் பேசியதை ஏற்றுகொள்ள முடியாது” என்றும், மிக கடுமையாகவே ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.

நவநீதகிருஷ்ணன்  கட்சி பொறுப்பு நீக்கம் செய்யப்பட்டது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.