சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு நடைபெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கிண்டியில் செயல்பட்டு வரும் ஒரு பிரபலமான உணவகத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருப்பதாக, புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, “சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் உள்ள பாத்ரூமில், செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்திருப்பதாக” குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பான புகாரை, திமுக பிரமுகர் ஒருவர் கிண்டி காவல் நிலையத்தில் புகாராக அளித்து உள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாரதி என்பவர், மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த பெண்மணி, கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் இன்றைய தினம் மதியம் சாப்பிட சென்று உள்ளார்.

அப்போது, அந்த உணவகத்தின் பாத்ரூமிற்கு சென்று, பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால், அந்த உணவகத்தின் பாத்ரூமிற்கு சென்ற போது, அங்கு ஒரு அட்டை பெட்டியில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

அப்போது, அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்து அந்த பெண், உள்ளே செல்போன் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அத்துடன், அந்த செல்போனில் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் கண்டும், அவர் இன்னும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த உணவகத்தில் சத்தம் போட்டு கூச்சலிட்ட நிலையில், அங்கு கூட்டம் கூடியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த உணவகத்தின் நிர்வாகிகள் சரியான பதிலை சொல்லாத காரணத்தால், இன்னும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்கிருந்து நேரமாக கிண்டி காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்தார்.

இது குறித்து வழங்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.