ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த ஆண்டு(2022) கோடை வெளியீடாக ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஸ்பாட் எடிட்டராக பணியாற்றிய மனு ஷஜு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய போர்க்காட்சி குறித்த ருசிகர தகவலைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தொகுப்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்து,

இந்தப் படத்தில் இருப்பது இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியமான பிரம்மாண்ட போர்க்காட்சி. இந்தக் காட்சியை எடிட் செய்த பிறகு புன்னகையோடு மணிரத்னம் சாரை நோக்கி ஓடினேன். அவரிடம் “எடிட் செய்தது தயாராக இருக்கிறது” என்று சொன்னதும், அவர் உடனடியாக லேப்டாப்பை வாங்கி தனது மடியில் வைத்துக்கொண்டார். இந்தப் போர்க்காட்சி ஹெலிகேம் மற்றும் GoPro உட்பட ஏழு கேமராக்களில் படமாக்கப்பட்டது. எப்போதும் இது போன்ற காட்சிகளை காட்டும் பொழுது இயக்குனர்களின் முகத்தை கவனிப்பது எனது வழக்கம். அதேபோல் இந்த காட்சியை பார்க்கும் மணி சாரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தக் காட்சி விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உட்பட முக்கிய நடிகர்களோடு ஆயிரம் பேருக்கு மேல் பங்குபெற்ற மிகப்பெரிய போர்க்காட்சி. காட்சியை முழுவதும் பார்த்து முடித்த பிறகும் மணிரத்னம் சார் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் யாருக்கும் இதை காட்டவில்லை. அருகில் அமர்ந்திருந்த ஜெயம் ரவி அவரிடம் காட்சியை பார்ப்பதற்காக கேட்டார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பார்த்துவிட்டு மணிரத்னம் சாரிடம் ஏதோ உற்சாகத்தோடு கூறினார். பின்னர் மணிரத்னம் சார் என்னை பார்த்து சிறிய புன்னகையோடு கட்டை விரலை உயர்த்தி (Thumbs Up) காட்டினார் எனது திரை பயணத்தில் இதை மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன். 

என தெரிவித்துள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manu Shaju (@manu.n.s62)