நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்து கோயில்களின் வடிவமைப்புகள் குறித்துப் பேசியிருந்தார். 

திருமாவளவன் இந்து கோயில்கள் பற்றிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிலர் எதிர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, அதே ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி திருமாவளவனை விமர்சிக்கும் வகையில், தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில், நடிகை காயத்ரி ரகுராம் மிக கடுமையாக விமர்சிக்கும் வகையில் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். 

இதனால், கடும் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினரும், நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக கடும் எதிர்ப்பலைகளையும், கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.

அத்துடன், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டப் பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் காசி, சென்னை சைதாப்பேட்டை 23 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், “எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட நடிகை காயத்ரி ரகுராம் மீது, கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுத்து அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்று, மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு, நீதிபதி கவுதமன் முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை வரும் ஜூலை 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதனால், நடிகை காயத்ரி ரகுராம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.