இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. விறுவிறுப்பான கதை களத்தை கொண்ட 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் வெற்றி நடித்த திரைப்படம் ஜீவி. இயக்குனர் விஜே.கோபிநாத் இயக்கிய  ஜிவி திரைப்படமும் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. நடிகர்கள் கருணாகரன்,மைம் கோபி மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஜீவி திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றியின் அடுத்து திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது “மெமரிஸ்” திரைப்படம்.

ஷிஜுதமீன் ஃபிலிம்  ஃபேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஷிஜுதமீன் தயாரிக்கும் “மெமரிஸ்” திரைப்படத்தை ஷியாம் பிரவீன் இயக்கியுள்ளார். ARMO &  கிரன் நுப்பிட்டால் ஒளிப்பதிவு செய்ய  இசையமைப்பாளர் கவாஸ்கர் அபினாஷ் இசையமைக்கிறார். மெமரீஸ் திரைப்படத்தின் வசனங்களை அஜயன்பாலா எழுதியுள்ளார்.நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மெமரிஸ் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணி அளவில் யூடியூபில் வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெமரிஸ் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. மீண்டும் ஒரு த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ள வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காகவும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.