தமிழகத்தில் சுமார் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் இருப்பதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த “மாணவர் சேர்க்கை பேரணியை” நடத்த வேண்டும் என்று, ஆசிரியர்களுக்கு “பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இங்குள்ள அரசுப் பள்ளிகளின் நிலமை மட்டும், கவலைக்குறிய வகையிலேயே இருக்கிறது. 

அதே நேரத்தில், தமிழக பள்ளிகளில் புதிய பாடத் திட்டங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தாலும், தற்போதைய நிலையில், “தமிழ்நாட்டில் மொத்தம் 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை” என்கிற அவலை தற்போது இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவற்றுடன், “தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் படித்து வருவதாகவும்” தமிழக பள்ளிக் கல்வித் துறை, கவலைத் தெரிவித்து உள்ளது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

இதனால், அது தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து 20 ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன், தமிழக  பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் வளாகத்தில் நடைபெற்ற அந்த ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், “தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், கிட்டதட்ட 669 தமிழக அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் படித்து வருகின்றனர்” என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அந்த வகையில், “11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும், 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களுமே படித்து வருவதாக” தெரிவிக்கப்பட்டது.

மேலும், “114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும், ஒரு மாணவர் கூட இல்லாமல் 22 பள்ளிகளும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாக” கவலை அளிக்கும் புள்ளி விபரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

“இந்த அரசுப் பள்ளிகளில் எல்லாம், மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, “பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் வரும் 14 ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்திட வேண்டும் என்றும், சுமார் 3,131 பள்ளிகளில் 10 முதல் 60 வரை மாணவர்கள் இருந்தும், தலைமை ஆசிரியரே 5 வகுப்புகளை நடத்தும் சூழ்நிலை இருக்கிறது” என்றும், கவலையுடன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “சுமார் 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருப்பதாகவும், அங்கு எல்லாம் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

 “ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், பயிற்சியில் பங்கேற்ற நாட்களுக்கு பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மிக முக்கியமாக, தமிழகத்தில் சுமார் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் இருப்பதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த “வரும் 14 ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை நடத்த வேண்டும்” என்று, ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.