தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் A.L.விஜய் அஜித்குமார் கதாநாயகனாக நடித்த கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து A.L.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப்பட்டினம் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் சூப்பர்ஹிட்டானது.

இதனையடுத்து தளபதி விஜய் உடன் இணைந்த A.L.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவா திரைப்படம் ரிலீசுக்கு முன்பு சில சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிலீசுக்கு பிறகு வெற்றியடைந்தது. அடுத்தடுத்து தனக்கே உண்டான பாணியில் சைவம், இது என்ன மாயம், தேவி, வனமகன், தியா, லக்ஷ்மி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

கடைசியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த தலைவி திரைப்படத்தை A.L.விஜய் இயக்கினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியான தலைவி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே இயக்குனர் விஜய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் தரப்பில் இருந்து இயக்குனர் A.L.விஜய் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றும் போலி கணக்குகளை பின் தொடர வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.