“என் குழந்தைக்கு சாதி - மதம் இல்லை” என்று, ஒரு தந்தை சான்றிதழ் வாங்கிய அசத்தி உள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

கோவையில் தான் இப்படி ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று, குழந்தைகளுக்கு நாம் பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, அவர்களது பள்ளி விண்ணபத்திலேயே நாம் அந்த குழந்தைகளின் சாதிகளை குறிப்பிடும் நடைமுறைகள் காலம் காலமாக நமது இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியான பழைய நடைமுறைக்கு ஒரு 3 வயது குழந்தையின் தந்தை ஒருவர் தற்போது முற்று புள்ளி வைத்து, சாதி யென்னும் பூனைக்கு முதல் ஆளாக மணி கட்டி உள்ளார்.

அது மட்டும் இல்லாமல், தமிழகம் உட்பட இந்தியா முழுமைக்கும் நமது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், அவர்களுக்கு உதவித் தொகை, வேலை வாய்ப்புகள் மற்றும் முதியோர் உதவித் தொகை வரை என அனைத்திற்கும் சாதி சான்றிதழ் இங்கே அவசியமான ஒன்றாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

இவற்றுடன், கல்வி - வேலை வாய்ப்பில் கூட, இட ஒதுக்கீடும் சாதி - மதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் வழக்கம் இங்கே நடைமுறையில் இருக்கிறது. 

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், கோவையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் தனது 3 வயது குழந்தைகளுக்கு “சாதி - மதம் இல்லை” என்ற சான்றிதழை பெற்று உள்ளார்.

அதன் படி, கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், “எனது 3 வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர்” என்கிற சான்றிதழை வருவாய் துறை, மூலம் பெற்று உள்ளார்.

அந்த தொழிலதிபர் நரேஷ் கார்த்திக், கோவையில் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

தொழிலதிபர் நரேஷ் கார்த்திக், தற்போது தனது மகளின் பள்ளி சேர்க்கைக்காக அணுகிய போது, அங்குள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஜாதி - மத சான்றிதழை கேட்டு உள்ளனர். 

ஆனால், இவரோ குறிப்பிட்ட அந்த பகுதியை மட்டும் நிரப்பாமல், அதனை காலியிடமாகவே விட்டு விட்டு அந்த விண்ணப்பத்தை அளித்ததால், அவரது விண்ணப்பம் எந்த பள்ளியலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

இதனால், தனது நண்பர்களிடம் ஆலோசனை நடத்திய அவர், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் “எனது மகள் எந்த சாதியையோ - மதத்தையோ சார்ந்தவர் இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும்” என, அவர் விண்ணப்பித்தார். 

இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, “3 வயது குழந்தையான ஜி.என்.வில்மா, எந்த ஜாதியையும் - மதத்தையும் சேர்ந்தவர் அல்ல” என்று தாசில்தார் சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இது பற்றி பேசிய தொழிலதிபர் நரேஷ் கார்த்திக், “மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி - மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும், நமது ஊரில் பள்ளிகளில் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதிச் சான்றிதழ் கேட்டு வருவது நடைமுறையில் இருக்கிறது” என்று, அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “சாதி - மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும் என்றும், அதை கருத்தில் கொண்டு எனது மகளுக்கு கோவை தாசில்தார் அலுவலகத்தில் சாதி - மதம் சாராதவர் என்ற சான்றிதழ் பெற்று உள்ளேன்” என்றும், அவர் கூறினார். 

“கோவை மாவட்டத்தில் முதல் முறையாக இது போன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது என்றும், இனி என்.சி. எனப்படும் நோ காஸ்ட் சாதி சாராதவர் என்ற பிரிவை சேர்க்க வேண்டும்” என்றும், அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.