குளத்தை காவல் காத்து வந்த இளைஞர் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், அங்குள்ள மாலப்பட்டி செட்டிக்குளத்தை மீன் வளர்க்க குத்தகைக்கு எடுத்து இருந்தார்.

அதன்படி, அந்த குளத்தில் அவர் மீன்களை வளர்த்து அன்றாடம் தினமும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்திருக்கிறார்.

அதன்படி தான், அவரது மகன் 26 வயதான ராகேஷ் என்பவர், நேற்றிரவு அந்த குளத்தில் காவல் காக்கும் பணியில் இருந்து உள்ளார். 

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், ராகேஷை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு, அங்கிருந்து  தப்பி ஓடி உள்ளனர்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்த போது, அங்கு உடலில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ராகேஷ் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்து உள்ளார்.

இதனால் பதறிப்போன அப்பகுதி மக்கள், உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ராகேஷை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், “ராகேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக” தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், “அந்த குளத்தில் மீன்பிடிக்கும் உரிமைக்காக ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்பகையால் ராகேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?” என்கிற கோணத்தில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, குளத்தை காவல் காத்து வந்த இளைஞர், நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.