ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

marina beach

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று 1,489 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. அதேபோல் சென்னையில் ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதுவரை 92 பேர் சென்னையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கவனத்தில் கொள்ளப்படாதது குறித்து தீவிர பரிசீலனை செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு போல கொரோனா பாதிப்பு மிகுதியாகி விடக்கூடாது எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று முழு முனைப்புடன் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு பொழுது கழிக்க ஏராளமானோர் வருவதை தடுக்கும் வகையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல முயன்றால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள போலீசார், அவர்களை தடுத்து நிறுத்துவார்கள். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக நடைபாதையில் செல்வதற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தார்கள்.