தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu rains

சென்னையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது. கடந்த 30-ம் தேதி இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. திடீர் மழையினால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் போன  மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் திடீர் என்று கன மழை கொட்டியதால் பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக் கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:தென் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தது .

மேலும் நாளை தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 4-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

அதனைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.