ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

sattai duraimurugan

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வதந்தி வெளியானதை அடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரிலும் தனியார் ஆலை முன் 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மேலும் இதனையடுத்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகனை கடந்த ஆண்டு டிச.19-ம் தேதி திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து சிறையில் உள்ள சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய புகாரில் சாட்டை துரைமுருகன் மீது இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.