தமிழ்நாட்டில் கொரோனா 3 வது அலை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த சில மாதங்களாக சற்று இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த தமிழகம், தற்போது மீண்டும் கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கித் தவிக்க தொடங்கி இருக்கிறது.

அதன் படி, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் 3 அலை பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சீனா நாட்டில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளுக்கு பரவி மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த உலக நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பானது, மேலும் அதிகரித்து வருவது தான் வேதனையாக இருக்கிறது.

அதன்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக உயர்ந்து உள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் தற்போது வரை 54 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. 

குறிப்பாக, இந்தியாவில் வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

முக்கியமாக, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 33, 750 ஆக உயர்ந்து உள்ளது. 

மேலும், மராட்டியத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதில், மும்பையில் மட்டும் 6 ஆயிரத்து 347 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மிக முக்கியமாக, பீகார் மாநிலம் பாட்னாவில் நாளந்தா மருத்துவ கல்லூரியில் 87 மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது, கொரோனா உறுதியான 87 மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதே போல், தமிழகத்திலும் கொரோனா 3 வது அலை தொடங்கி விட்டதால், விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்தி வருவதாக” கவலைத் தெரிவித்து உள்ளார்.

இதனால், “மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவறுத்தினார்.

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா நிலவரத்தைப் பார்க்கும் போது, “நேற்று முன் தினம் புத்தாண்டு அன்று சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 682 ஆக இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் அன்றைய தினம் 1,489 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இது, நேற்றைய தினம் சற்று உயர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 1,600 யை நெருங்கி வருகிறது. அதன்படி, நேற்று 1,594 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், நேற்று 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 

இதன்படி, கடந்த 27 ஆம் தேதியில் இருந்து நேற்று 2 ஆம் தேதி வரையில், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4 மடங்கு அளவுக்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 5 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.