தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. 98 வயதாகும் அவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கொரோனாவை வென்ற 98 வயது நடிகர் என ஆங்காங்கே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இவரது இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

3 வாரங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணனுக்கு நிமோனியா ஏற்பட்டு கண்ணூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. உடல்நலம் தேறிய பிறகு உன்னிகிருஷ்ணன் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த இரண்டு நாளில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து மீண்டும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இம்முறை செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நாட்கள் வைத்திருந்தார்கள். அதன் பிறகு அவர் குணமாகிவிட்டார். 

இளமை பருவத்திலிருந்தே உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவர் பாடிபில்டராகவும் இருந்தவராம். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் தாத்தாவாக நடித்திருந்தார். அதன் பிறகு பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் ஹாசனுக்கு தாத்தாவாக நடித்தார் உன்னிகிருஷ்ணன்.  ரஜினியின் சந்திரமுகி படத்தில் இவர் வரும் காட்சி இன்னும் ரசிகர்களின் நினைவில் உள்ளது. 

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் இருப்பார் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், திரையுலகை சேர்ந்தோருக்கும் இரங்கலை தெரிவிக்கிறது நம் கலாட்டா.