“ராசி பலன்கள் பரிகாரங்கள் பொதுவாக எல்லாருக்கும் பலிப்பதில்லை ஏன்?” என்பது குறித்து, விளக்கமாக கூறுகிறார் பிரபல ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர்.

யோக திசை:

பொதுவாக லக்னாதிபதி, ராசி அதிபதி, தனாதிபதியான இரண்டாம் அதிபதி, சுகாதிபதியான வீடு வாகன யோகம் தரும் நான்காம் அதிபதி, பஞ்சமாதிபதியான பூர்வ புண்ணிய ஐந்தாம் அதிபதி, பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதி,தொழில் அதிபதியான பத்தாம் அதிபதி, லாபாதிபதியான பதினொன்றாம் அதிபதி திசை ஆகிய அனைத்தும் ஜாதகர் வாழ்க்கையில் நல்ல மாற்றம் மற்றும் ஏற்றத்தை தரும். கிரக வலு பெற்றால் சாதாரண நிலையில் இருப்பவரையும் கோடிஸ்வரராக மாற்றி புகழ் அந்தஸ்தை தந்து விடும். 

கெட்ட திசை என எதிர்பார்க்கும் திசையும் சிலருக்கு யோகத்தை தருவார். ஜாதகத்தில் கிரக வலிமை,கிரக இணைவு, சுப கிரக பார்வை, குறிப்பாக நடக்கும் திசை நாதன் நின்ற நட்சத்திர சாரம் வாழ்க்கையில் அதிஷ்டத்தையே தரும். திசைக்கு எந்த இடத்தில் புத்தி நாதன் இருப்பதை பொருத்தும் திசையில் சில புத்திகள் நன்மையான பலனை தரும். கெடுதல் தரும் கிரகம் கெட்டிருந்தாலும் விபரீத ராஜ யோகத்தால் நற் பலனை வாரி வழங்குவார்.

சுமாரான திசை: 

கலப்பு அதிபதிகள் திசை அதாவது 3,9 க்குடையவன் திசை, 6,9 க்குடையவன் திசை, 8,1 க்குடையவன் தசை, 12,9 க்கு உடையவன் தசை என மறைவிட அதிபதிகள் மற்றும் யோகாதிபதிகள் திசை இணைந்து செயல்படும் போது திசையில் நன்மை, தீமை கலந்து தான் நடக்கும். தசா நாதன் வலுக்குறைந்து புத்தி நாதனின் நிலையை பொறுத்து சிலருக்கு புத்திகளில் பெரு நன்மை, பெருந்தீமை நடக்கும்.

கெட்ட திசை :

3,6,8,12 க் குடையவர்கள் திசை அதிஷ்டம் தருவது போல் ஆரம்பித்து திடீர் பாதகத்தை செய்துவிடுவார். 3 வது திசை நீச திசை, 4வது சனி திசை, 5 வது செவ்வாய் திசை, 6 வது குரு திசை தீமை தரும். நெருங்கியவர் இழப்பு, சிறைவாசம், தீரா நோய், கண்டம், அவமானம், எதிரியால் தொல்லை, கடனால் பாதிப்பு, தற்கொலை, கொலை பழி என பல வித கொடுமைகள் நடக்கும். 

ஏழரை சனியுடன் கூடிய சந்திர திசையும் பல சங்கடங்களை தருகிறார். கோச்சார பலன் நன்றாக இருந்தாலும் தீமை தவிர்க்க முடியாததாகி விடும். இது தான் கஷ்டம் என சொல்ல முடியா கஷ்டத்தை அனுபவிக்க நேரும். நல்ல திசை என எதிர்பார்த்த திசை சில நேரம் பாதக நட்சத்திரத்தில் அமர்வது நன்மை தராது. சில நேரம் தீய கிரக பார்வை சேர்க்கையும் நற் பலனை தடுத்து விடும்.

பரிகாரம்:

கோச்சார பலனை விட நடக்கும் திசை, புத்தி அறிந்து நடந்து கொண்டால் நிச்சயம் நன்மைகள் நடைபெறும். கிரக தோஷங்களை கிரக சாந்தி செய்து கொள்வதும், பேராசையின்றி தகுதிக்கேற்ப வாழ்க்கையையும், மனதையும் மாற்றி கொண்டால் நிம்மதியும், சந்தோஷமும் வாழ்வில் நிறைந்திருக்கும்.