69 ஆண்டுகளுக்குப் பின்பு, பிரிஸ்பேன் மைதானத்தில் மிக்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை 2-வது முறையாக வென்றதுள்ளது. இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். 


’’ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியினருக்கு என் பாராட்டுகள் ! உங்களது வருங்கால முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்”என்று பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’ பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற  இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று பாராட்டி உள்ளார். 


திமுக தலைவர் ஸ்டாலின் ,’’ ஆஸ்திரேலியாவில் அருமையாக விளையாடி டெஸ்ட் தொடரை வெற்றிப்பெற்ற இந்தியன் அணிக்கு வாழ்த்துக்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு, அணியின் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த இறுதிப்போட்டி எடுத்துக்காட்டுகிறது. தமிழக இளம் வீரர்களின் அற்புதமான செயல்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்கு வாழ்த்துக்கள்! ” என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார்.

” ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை  2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஆகிய தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! “ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார்.