மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகரான பி.சி.சோமன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 81. இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

நடிகர் சோமன் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பல படங்கள் சூப்பர்ஹிட் படங்கள் ஆகும். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக ஸ்வயம்வரம், விதியன், மதிழுகள் உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளை பெற்றுள்ளார். இதனை மலையாள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு தங்கள் இரங்கல் பதிவை பதிவிட்டு வருகின்றனர். 

கவுரவர், துருவம், ஃபயர்மேன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, சோமனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மம்மூட்டியுடன் இவர் நடித்த ஃபயர்மேன் படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். அந்த படத்தில் இவரது பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. 

மறைந்த நடிகர் திருவாங்கூர் டைடானியம் புரோடெக்ட்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். புகழ்பெற்ற இயக்குனர் அதூர் கோபாலகிருஷ்ணன் படங்களின் மூலம் மிகுந்த பாராட்டை பெற்றவர் சோமன். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி இறந்த செய்தி வெளியானது. 98 வயதான அவரும் ஓர் பழம்பெரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பு காரணமாக தொடர்ந்து நடிகர்களின் இறப்பு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களது படங்கள் பேசும் என்று பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.