மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 65' என அழைத்து வருகிறது படக்குழு.

முதல் அறிவிப்பே சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் கலாநிதி மாறனை சந்தித்த நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனை படத்தின் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்தார் விஜய். இதற்காக சன் பிக்சர்ஸ் சார்ப்பில் வெளியான புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மார்ச் 31 சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.

தளபதி 65 படப்பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக புகைப்படங்களை வெளியிடும் எனத் தெரிகிறது. சென்னை, ஹைதராபாத், ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.

தளபதி 65 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பூஜையில் தளபதியின் லுக் மற்றும் காஸ்டியூம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், ஸ்மார்ட்டா இருக்கீங்கனா... என்று கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.