பாலிவுட் திரை வட்டாரத்தில் பிரபலங்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் இருப்பது தொடர்பாக முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகளிடமும் நார்காடிக்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் அஜாஸ் கானை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஜாஸ் கான். மேலும், ஏகப்பட்ட பாலிவுட் படங்களிலும் சில டோலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

போதைப் பொருள் டீலர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சமீபத்தில் அஜாஸ் கானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் போது போதைப் பொருள்கள் சிக்கிய விவகாரம் தொடர்பாக நேற்று விமான நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.

ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த அஜாஸ் கானை விசாரணைக்காக போலீசார் நேற்று (செவ்வாய் கிழமை) அழைத்து சென்றனர். கடந்த வாரம் போதைப் பொருள் டீலர் ஷதாப் படாடா என்பவரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த விசாரணையில் அஜாஸ் கான் பெயர் அடிபடுவே அவரை விசாரணை செய்தனர்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் அஜாஸ் கானிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் மீது குற்றம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் இன்று அவரை கைது செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதனால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. 

கடந்த வியாழனன்று போதைப் பொருள் டீலர் ஷதாப் படாடா வீட்டில் சோதனை போட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 2 கிலோ மெபிட்ரோன் எனும் போதைப் பொருள் சிக்கியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஏகப்பட்ட வெளிநாட்டினரையும் இந்த விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.