கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டதால்,  திரையுலகம் வரலாறு காணாத இழப்பை எதிர்கொண்டது. படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் அனைவரும்  பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

இதையடுத்து, கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு கட்டுப்பாடுகள், மற்றும் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத்தலங்ககளுக்கு 100 சதவிகித தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால்,  தியேட்டர்களிலும் 100 சதவிகித இருக்கைகளை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என  திரையரங்கு உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். 

மேலும், நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். நடிகர் சிம்புவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,  திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்கள் அனுமதி தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

தமிழகத்தில், கொரோனாதொற்று பரவல் 900க்கும் கீழே குறைந்துள்ள நிலையில்,  திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஜயின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முழு அளவில் திறக்கப்படுகின்றன. இதனால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயனும் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி. பொங்கலுக்கு வரும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன், இந்த இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் உள்ளது. நேற்று தான் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் பிறகு ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.