அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சாணிக் காயிதம். இந்த படத்தில் முதல் முறையாக நடிகராக களமிறங்க உள்ளார் செல்வராகவன். இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன். இந்த மோஸ்ட் வான்டட் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சென்ற லாக்டவுனில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த மிஸ் இந்தியா படத்தை நரேந்திர நாத் இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். 

இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை, ஆழமான கருத்துடன் தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே. இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கடைசியாக சூர்யா வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கியிருந்தார். 

இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள செல்வராகவனை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். சாணிக் காயிதம் படத்தில் அவரது லுக் மேக்கிங் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக்கே இப்படி என்றால், நிச்சயம் படத்தில் செல்வராகவனை எப்படி செதுக்கியிருப்பார் அருண் மாதேஸ்வரன் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.