திரை ரசிகர்களுக்கு சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன். இந்த மோஸ்ட் வான்டட் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சென்ற லாக்டவுனில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த மிஸ் இந்தியா படத்தை நரேந்திர நாத் இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். 

இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.