சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன். நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது என்று பாராட்டினார். 

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் கையிலே ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சைந்தவி பாடிய இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மாறாவின் சாதனை ஓட்டத்தை குறிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது இப்பாடல் இடம்பெறும். 

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது. 

சமீபத்தில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைகிறார் சூர்யா.