ஃபேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 32 வயதான ராதா சிங் என்ற இளம் பெண் ஒருவர், எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியே இருந்து உள்ளார்.

குறிப்பாக, ஃபேஸ்புக் எந்நேரமும் மூழ்க்கிடந்த அந்த இளம் பெண், தனது ஃபேஸ்புக் ஐடியில் இருந்து ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவருடைய செல்போன் எண்ணுடன் பகிர்ந்து, “ரூ.2,500” என்ற விலையையும் அதில் குறிப்பிட்டு மிகவும் இழிவான வகையில் அந்த பதிவை அவர் பதிவிட்டிருந்தார். 

அத்துடன், அந்த சிறுமியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ராதா சிங், சில அவதூறான மெசேஜ்களையும் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த சம்மந்தப்பட்ட அந்த சிறுமி, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். அத்துடன், சிறுமியின் தொலைப்பேசிக்குப் பலரும் தொடர்பு கொண்டு, தவறான உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகள் மீது அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் இளம் பெண் ராதா சிங் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் பகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார், இளம் பெண் ராதா சிங்கை அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக இளம் பெண் ராதா சிங்கிடம், அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “இதற்கு முன்பு அவர் டெல்லியில் வசித்து வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான், அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்ததும்” தெரிய வந்தது.

மேலும், “அகமதாபாத்தில் அந்த சிறுமியின் தந்தையுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நட்பாகப் பழகி வந்து உள்ளனர். அதன் பிறகே, இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். 

இந்த நிலையில் தான், தனது ஆண் நண்பரைப் பழிவாங்கும் வகையில் அவரது மகளின் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் இளம் பெண் ராதா சிங் அவதூறாகப் பதிவிட்டு உள்ளார்” என்பதையும் போலீசார் விசாரணையின் மூலமாக கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஃபேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை சக இளம் பெண் ஒருவரே பகிர்ந்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.