கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு இம்மாதம் மார்ச் 10-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார்.

தற்போது சியான் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சியான் 60 படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு படங்களில் அனிருத் பணிபுரிவதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இணைந்த செய்தி கடந்த வாரம் வெளியானது. கடைசியாக படத்தில் நடிகர் சனத் இணைந்த தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் நடிகர் தீபக் பரமேஸ்வரன் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. நடிகர் தீபக் பரமேஸ்வர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட, மெர்குரி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சியான் 60 படத்தில் காஸ்டியூம் டிசைனராக பிரவீன் ராஜா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பும் இன்று காலை வெளியானது. கைதி, ஜகமே தந்திரம் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளாராக பிரவீன் ராஜா பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.